Sunday 28 November 2021

பெரியவர்களின் கவனத்திற்கு...

பல ஆண்டுகளாக வேலைகளை செய்து வீட்டுக்கென யோசித்து இராப்பகலாய் உழைத்து அலுத்து களைத்து சலித்து போய், என்று தான் இதற்கெல்லாம் ஒரு விடிவு, முடிவு என்று ஏங்கும் அனைத்து பெரியவர்களுக்கும் வணக்கம்.

இந்த பதிவு கோபத்திலும் முயலாமையிலும் எழுதப்படும் குற்றப்பதிவு அல்ல. ஏக்கத்திலும் எதிர்பார்ப்பிலும் வைக்கப்படும் கோரிக்கை.

உங்கள் உடல் உள்ளம் ஒத்துழைத்தபோது நீங்கள் செய்த வேலைகள் அனைத்தும் இன்பத்தையும் கடமையை சரிவரச் செய்த திருப்தியையும் உங்களுக்கு அளித்திருக்கும். எங்களுக்கும் அப்படி தான். ஆனால் உடலோ உள்ளமோ ஒன்றவில்லை என்றாலும் கூட அந்த வேலையை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை உங்கள் தலைமுறை மட்டும் தங்கள் மீது விதித்துக் கொள்கிறது. கடமைகள், வீட்டு வேலைகள் என்றும் அழியாதவை. இன்று சமைப்பதால் நாளை சமைக்காமல் இருக்கப்போவதில்லை. பல நூற்றாண்டுகளாக சமைத்தும் இன்னும் வேலை முடிந்தபாடில்லை. ஒரு நாளோ சில நாட்களோ இவற்றை விட்டுக் கொடுத்தல் தட்டிக் கழித்தல் ஆகாது.

ஒரு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்துப் பூட்டிச் சென்று பல ஆண்டுகள் கழித்து வந்து பார்த்தால் அனைத்து பொருட்களும் அப்படியே இருக்கும், தூசியும் ஒட்டடையும் மட்டும் அதிகப்படி. அதே வீட்டில் ஒரு மனிதரைப் பூட்டிச் சென்றால்? பொருட்களை காக்கும் பொருட்டு உயிர்களை கவனிக்க மறக்கிறோமோ என்ற பயம் அதிகரிக்கிறது.

ஐம்பது ரூபாய் மிச்சம் செய்ய உடலை வருத்திக் கொள்ளும் நீங்கள் ஒரு நாள் ஐம்பதாயிரம் கொடுத்தேனும் அந்த வலியை போக்க தவிக்கும் மக்களைப் பார்த்தால் மனம் மாறக்கூடும். 

முப்பது நாற்பது வயதினர் தங்கள் பெற்றோர்களையும் பிள்ளைகளையும் குடும்பத்தையும் தங்களையும் சரிவர கவனித்துக்கொள்ள கஷ்டப்படுவது நியாயம் என்றே படுகிறது. அதே மக்கள் அறுபது வயதினர் ஆன பிறகும் பொறுப்புகளை வீட்டுக் கொடாமல் மேலும் அயர்ந்த தங்கள் உடல் உள்ளம் மீது செலுத்தும் பளு தவிர்க்கக்கூடியது. உங்கள் ஆயுள் முழுதும் உங்களுடன் பயணிக்கும் உடலுக்கு நீங்கள் காட்டும் நன்றி இதுவோ?

உங்கள் முடியாமையை சொற்கள் மறைக்கலாம். செயலும் உடலும் காட்டிக் கொடுத்து விடும். முடியாமை அவமானம் அல்ல. இயல்பு, தவிர்க்க முடியாதது. இயற்கையின் விதிகளில் ஒன்று. அதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஒதுக்கிச் செல்ல முடியாது. 

கடமை தவறினால் இவர்கள் என்ன நினைப்பார்களோ அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நீங்கள் அஞ்சும் அனைவரும் தற்காப்பு முயற்சியில் முனைந்துள்ளனர். உங்களைப் பற்றி நினைக்க நேரமோ ஆர்வமோ தேவையோ அவர்களுக்கு இல்லை என்பதை உணருங்கள். 

உங்கள் பிள்ளைகள் உங்களிடம் உரக்கப் பேசுவதும் கோவம் கொள்வதும் உங்களுக்கு அவமரியாதையாக தோன்றுகிறது. என்ன சொல்கிறார்கள் என்பதை விட எப்படி சொல்கிறார்கள் என்பதே என்றும் உங்கள் பார்வை. அதனால் தானோ என்னவோ அன்பாக பணிவாக உங்கள் மீது பிறரால் நடத்தப்படும் அவமானங்களை நீங்கள் பொருட்படுத்துவதே இல்லை. அக்கறை மேல் மட்டும் தான் உங்கள் ஆத்திரம் எல்லாம்.

உலகைக் காக்கும் ஆர்வத்தில் உங்களைக் காக்க மறவாதீர்கள். நீங்கள் உங்களையே மெதுவாக அழித்துக் கொள்ளும் முயற்சியில் உங்களுக்கு உடந்தையாக ஊமையாக இருக்கும் நல்ல பிள்ளைகளை விட உண்மையை உணர்த்த சிறிது கெட்ட பிள்ளைகள் ஆவது தவறில்லை என்றே தோன்றுகிறது. இங்கு கூறப்பட்டவை உங்களுக்கு தெரியாதவை அல்ல. ஆயினும் அவ்வப்போது நினைவுபடுத்துவதில் பாதகமில்லை. 

எல்லாத் தேவைகளும் சிறியவையே.  எப்படியும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உணர்த்திய காலம் இந்த ஈராண்டு. உங்களிடம் 'எங்களுக்காக இதை செய்யுங்கள்' என்று கேட்கும் காலம் ஓடிவிட்டது. 'எங்களுக்காகவாவது எதையும் செய்து கொள்ளாதீர்கள்' என்ற கோரிக்கை மட்டுமே எங்களிடம் மீதமுள்ளது.

இத்தனை நேரமும் இந்த பதிவை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. ஏதேனும் ஒரு கருத்து உங்களை சிந்திக்க செய்திருந்தால் மிக்க நன்றி. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இவற்றை சொல்லாமல் விட்ட குற்ற உணர்ச்சியை உங்கள் பிள்ளைகளுக்கு போக்கவே இந்தப்பதிவு. 

Sunday 28 February 2021

முக்கியமான முடிவு

அவள் ஒரு துடுக்கான பதினைந்து வயது இளம்பெண். இது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம் என்றும், இதில் பெறும் வெற்றியே வாழ்வை நிர்ணயிக்கப் போகிறதென்றும் பிறர் சொன்ன வதந்திகளை அவளால் நம்பாமல் இருக்க முடியவில்லை. அதனாலோ என்னவோ மிகுந்த பொறுப்புடனும் ஆர்வத்துடனும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு இராப்பகலாய் அயராது படித்து பள்ளியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றாள். அதிக மதிப்பெண் எடுத்ததால் ஊரின் பெரிய பள்ளியில் படிக்கும் வாய்ப்பும் கிட்டியது. அந்த இன்பத் திளைப்பில் ஆழ்வதற்குள் அடுத்த கேள்வி கண் முன் தோன்றியது. எந்தப் பிரிவு எடுத்து படிக்க வேண்டும் என்பது தான். மீண்டும் சுற்றம் சூழ்ந்து இது தான் மிக முக்கியமான முடிவென்று பயமுறுத்தியது மட்டுமின்றி அக்கம் பக்கத்தார் படித்து வேலைக்குச் சென்ற அதே பிரிவை பரிந்துரைத்தனர். பொறுப்பான பெண்ணான இவள் சற்றும் தளராமல் அவர்கள் சொன்ன பிரிவை எடுத்து புது பள்ளிக்கூடம் செல்லும் நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.

பள்ளி திறக்கும் முந்தைய நாள் இவளின் ஆர்வத்தையும் படபடப்பையும் சொல்லவா வேண்டும். புத்தகங்களுக்கு அட்டை போடுவதிலிருந்து அவற்றை புதிய பையில் அடுக்கி வைத்துப் புது பள்ளியின் சீருடை தைத்து வாங்கி வந்து வைப்பதிலிருந்து வீடு ஒரு வழி ஆனது. இரவு தூங்க முயற்சித்த பொழுது எதிர்காலக் கனவுகள் பறந்தோடத் தொடங்கின. உயர்நிலை பள்ளியிலும் வீறு கொண்டு படித்து நல்ல கல்லூரியில் இடம் பிடித்து நல்ல ஊதியம் கிடைக்கும், உலகம் பாராட்டி மதிக்கும் உயர்ந்த உத்தியோகத்தில் வேலைக்குச் சேர்ந்து தன்னை சார்ந்தோரைப் பெருமைக்கு உள்ளாழ்த்த வேண்டும் என்னும் எண்ணங்கள் வந்து வந்து மறைந்தன. இவை எல்லாம் பெற்ற பிறகு தன்னிலை குறித்த கற்பனைகளும் பரந்து விரிந்தன. உற்றாருக்கும் பெற்றோருக்கும் என்னவெல்லாம் வாங்கித்தர, வசதிகள் செய்ய வேண்டும், எப்படி அவர்களின் சுகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் காரணியாய் இருந்து கண்டு களிப்பதென்ற கேள்விகளுக்கு விடைதேடத் தோன்றியது. இப்படியே நள்ளிரவு கழிய, தண்ணீர் குடிக்க எழுந்த அவள் அம்மா, "சீக்கிரம் தூங்கு. நாளைக்கு மொத நாளே எழுப்பும் போது திட்ட வைக்காதே" என்ற செல்லக் கண்டிப்புடன் அவளை தூங்கச் சொன்னாள்.

மறுநாள் காலை எழுந்து கிளம்பி பள்ளிக்கு வந்தாயிற்று. எப்படி அந்த காலை வேலைகள் நடந்ததென்றே நினைவிலில்லை. பரப்பரப்பின் இடையில் எல்லாம் சரியாகத்தான் நடந்ததென்ற தெளிவும் பெரிதாக இல்லை. புதிய பள்ளி, புதிய வகுப்பு, நண்பர்கள், ஆசிரியர்கள், பாடங்கள், வாழ்க்கை என்று அடுத்த நொடி ஆச்சரியங்கள் அவளை ஆட்கொண்டு இருந்தன. காலை வகுப்புகளில் பெரிதும் பாடங்கள் நடத்தாமல் அறிமுகத்துக்கென்றே நேரம் செலவிடப் பட்டது. தன்னை அனைவரின் முன்பும் அறிமுகம் செய்து கொண்டு தன் இடத்திற்கு வந்து அமர்ந்தாள். கவனிப்பதற்கென்று பெரிதாய் எதுவும் நடக்கவில்லை. இந்த வகுப்பு முடிந்ததும் மதிய உணவு இடைவேளை. யாரிடமும் பெரிதாகப் பேசி நட்பு பாராட்ட அது நல்ல சந்தர்ப்பமாய் இருக்கும் என நினைத்துக் கொண்டாள். மீண்டும் எதிர்கால கற்பனைகளின் உள்ளானாள். இரவு சரியாகத் தூங்காததால் கற்பனை ஓட்டத்தில் உறங்கியே போய் விட்டாள்.

சற்று நேரத்தில் கேட்ட மணியோசை தூக்கத்திலிருந்து அவளை திடீரென்று விழிக்கச் செய்தது. எங்கிருந்து ஓசை வருகிறதென்பதை அவள் உணரவில்லை. சுற்றியும் பார்த்தால் நவீன வசதிகள், சொகுசு நாற்காலி, மேஜை, கணினி, கைபேசி, குளிரூட்டப்பட்ட அறை. கனவில் கண்ட அந்த இளம்பெண்ணினும் தான் முதிர்ச்சியான மங்கை எனத் திடுக்கிட்டாள். இடையில் கடந்த ஆண்டுகளும், தான் ஒரு சர்வதேச நிறுவனத்தில் வேலை செய்கிறாள் என்பதும், இரவு வேலை முடித்து மேஜை மேலே படுத்துறங்கி விட்டாள் என்பதும் அந்நொடியில் அவளுக்கு நினைவுக்கு வந்தது. உடனே மேஜை மீது அலறிக் கொண்டிருந்த கைபேசியை எடுத்து மேலதிகாரியின் கேள்விகளுக்கு பதில் சொன்னாள். "ஆம். இன்று அனுப்ப வேண்டிய ஆவணங்களில் தாங்கள் சொன்ன திருத்தங்களைச் செய்து முடித்து நேற்றிரவே உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டேன்" என்று சொல்லி முடித்து கைபேசியைக் கீழே வைக்கப் போனாள். அப்போது "சாப்பிட்டாயா? ஏன் ஒரு வாரமாக அழைக்கவே இல்லை? அந்த ஊரில் கொரோனா தொற்று மீண்டும் அதிகமானதென்று செய்தி பார்த்தோம். எந்த பிரச்சனையும் இல்லையே? பத்திரமாய் இரு. வேளைக்குச் சாப்பிடு" என்னும் குறுஞ்செய்தியும், ஆறு விடுபட்ட அழைப்புகளும் அவள் தந்தையிடமிருந்து வந்திருந்தது. "ஒரு பிரச்சனையும் இல்லை. வேலை இருந்ததால் அழைக்க நேரமில்லை" என்று பதில் அனுப்பினாள்.

மீண்டும் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவெடுக்கும் நேரம் வந்தது. ஆனால் இப்பொழுது பயமுறுத்தவோ பரிந்துரைக்கவோ உடன் யாருமில்லை. தன் வாழ்க்கை தன் கையில் என்று எண்ணி கைபேசியை எடுத்து தேட தொடங்கினாள், என்ன மதிய உணவு வாங்குவதென்று!

Sunday 18 October 2020

காற்றே, என் வாசல் வந்தாய்

இட் வாஸ் ஏ டஃப் வீக். இத நீங்க படிக்க கஷ்ட பட்டத விட கஷ்டமா இருந்துது, உண்மையாவே. 6 மாசமா தேவைக்காக மட்டுமே வெளியில போய்ட்ருந்தோம், ஆனா இந்த 6 நாள் அத விட மோசம். ஜன்னல், கதவு எல்லாம் கூட தெறக்காம வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியதா போச்சு. Lockdown க்கு உள்ள ஒரு lockdown, ஒரு பயம், தயக்கம். ஒரு வழியா எல்லாம் சரி ஆயிடுச்சுன்னு நியூஸ் வந்தப்புறம் தான் தெம்பாச்சு. இப்போ எல்லாம் வேலை நாள்ல என்ன பண்ணனும்னு தெளிவு இருக்கோ இல்லையோ, சனி ஞாயிறுக்கு ஏகப்பட்ட வேலை கொட்டி கெடக்கு. அடுத்த வாரத்துக்கு தேவையான காய்கறி பொருள் எல்லாம் வாங்கலாம்னு கடைக்கு கிளம்பினேன். போயிட்டு வந்து ஒரு குளியல போடலாம்னு சென்டெட் கேண்டல பாத்ரூம் ல ஏத்தி வெச்சுட்டு ஜன்னல் எல்லாம் தெறந்து விட்டேன் வீட்டுக்குள்ள ஃபிரெஷ் ஏர் வரட்டுமேன்னு.

"புதிய வானம், புதிய பூமி" னு பாடிக்கிட்டே கடைக்கு போய் வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிட்டு திரும்பி வரப்போ டிராபிக் சிக்னல் கிராஸ் பண்ணப்பறம் ஒருத்தர பாத்தேன். சிக்னல் மாறினத கூட கவனிக்காம கிராஸ் பண்ணாமலே நின்னுக்கிட்ருந்தாரு. எதையோ தொலைச்சுட்டு தேடுற மாதிரி இருந்துது, வழி மாறி வந்துட்டாருனு தோணுச்சு. எனக்கு ஒண்ணும் பெருசா வழியெல்லாம் தெரியாது, ஆனா எந்த ஊருக்கு போகணும்னு சொன்னாருன்னா லெஃப்டா ரைட்டானு சொல்ற அளவு தெரியும். போய் கேக்கலாம்னு நெனைக்கிறப்போ அவர் மாஸ்க் போடலன்னு  கவனிச்சு தள்ளியே நின்னேன். "ஏதாவது தொலைச்சுட்டீங்களா? இல்ல இடம் ஏதும் தவறி வந்துட்டீங்களா?" ன்னேன். திடீர்ன்னு என் குரல் கேக்கவே அவருக்குத் தூக்கி வாரி போட்டுது. ஒரு வழியா நிலமை புரிஞ்சு எனக்கு அவர் பதில் சொல்றதுக்குள்ள "நீங்க மாஸ்க் போடலையா?"ன்னு கேட்டுட்டேன், கேக்கலாமா கூடாதானு யோசிக்கிறப்போவே வார்த்தை வாயிலேர்ந்து வெளிய வந்துடுச்சு. அவர் அத கவனிச்சதா தெரியல. என் முதல் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சார். "நான் எங்க இருந்தேன்னு எனக்கு தெரியும், ஆனா இங்க இருந்து அங்க எப்படி திரும்பி போகணும்னு தான் தெரியலன்னார். "எங்க இருந்தீங்க? எப்படி இங்க வந்தீங்க?"ன்னு நான் கேட்டதுக்கு திக்கித் திணறி ஞாபகத்த வர வெச்சுகிட்டு சொன்னாரு.

"இடம் பேரெல்லாம் தெரியாது, ஆனா எனக்கு அங்க வழியெல்லாம் அத்துப்படி. எங்க விட்டாலும் சரியா போய் சேர்ந்துடுவேன். யாரையோ தொரத்தி ஓடுறப்போ ஒரு பழ வண்டியில ஏறின ஞாபகம், அப்புறம் இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் முழிச்சேன், இங்க இருக்கேன்"னு அவர் சொன்னதும் லேசா மிரண்டு போயிட்டேன். "என்னங்க சொல்றீங்க? யாரையோ தொரத்தினீங்களா? என்ன ஆச்சு? யார? ஏன்? நீங்க யாரு?" னு வரிசையா அடுக்கினதுல ஏற்கனவே களைச்சு போன அவருக்கு தலையே சுத்த ஆரம்பிச்சுது. அவர ஓரமா இருக்கிற ஒரு பெஞ்சுல கூட்டிட்டு போய் உக்கார வெச்சு கைல இருந்த பையிலிருந்து ரெண்டு பழம் எடுத்து குடுத்து சாப்பிடுங்கன்னேன். இல்ல பரவாயில்லன்னு சொல்லிட்டு, அவர் கதைய சொல்ல ஆரம்பிச்சாரு.

எங்க வீட்டுல நான், அப்பா, அம்மா, தம்பி. நாலு பேரு. இன்னைக்கு என்னோட பொறந்த நாள். நேத்து சாயங்காலம் எங்க அப்பா அம்மா தெரிஞ்சவங்கள பாக்க கெளம்பிக்கிட்ருந்தாங்க, என்னையும் தம்பியையும் கூப்பிட்டாங்க. நான் நாள் பூரா அலைஞ்சதுல களைப்பா இருக்கு வரலன்னு சொல்லிட்டு தூங்க போயிட்டேன், அவங்க மூணு பேரும் தயார் ஆனாங்க. பத்திரமா இருந்துக்கோன்னு சொல்லிட்டு கிளம்பினாங்க. திரும்பி வரும்போது எனக்கு புடிச்ச இடத்துலேர்ந்து சாப்பாடு ஏற்பாடு பண்ணி கொண்டு வரணும், பொறந்த நாளைக்கு surprise ஆ இருக்கும்னு அம்மா அப்பா கிட்ட சொன்னாங்க, எனக்கு கேக்காதுன்னு நெனச்சு. கேட்டுகிட்டே அசதில நான் தூங்கிட்டேன்.

கொஞ்ச நேரம் போச்சு, எவ்வளோன்னு தெரியல. ஏதோ சலசலன்னு சத்தம். எப்பவுமே சத்தம் வர்றது வழக்கம் தான், ஆனா இப்போ கொஞ்சம் வித்தியாசமா இருந்துது. முழிச்சு பாத்தேன், இன்னும் விடியாத மாதிரி தான் இருந்துது. ஆனாலும் விடிஞ்சப்புறம் கேக்குற சத்தம் எல்லாம் கொஞ்சம் பீதியான மாதிரி கேட்டுச்சு. பயந்து போய் சுத்தியும் முத்தியும் பாத்தேன், ஒரே மங்கலா இருந்துது. இந்நேரம் அப்பா அம்மா வந்துருக்கணுமே, இன்னும் வரல. தேடலாம்னு தெரிஞ்ச இடமெல்லாம் தேட போனேன். ஒரு பக்கம் அந்த ஊரு மனுஷாளுங்க இருக்கிற இடத்துல தேடினேன், ஒருத்தரையும் காணும். வீடு பூட்டிருந்தது. தொறந்திருந்தாலும் உள்ள எல்லாம் விட்டுட மாட்டாங்க. அதிக பட்சம் வெளிய வெச்சே தான், அடிக்காத குறை.

இன்னொரு பக்கம் போகலாம்னு போனேன். போக போக தூங்கி எழுந்தப்போ கேட்ட கூச்சல் சத்தம் அதிகமாச்சு. பக்கத்துல வர மாதிரி இருந்துது. என்னமோ சரியில்லன்னு புரிஞ்சுகிட்டு எல்லா பக்கமும் உஷாரா பாத்துகிட்டே போனேன். திடீர்னு எதிர் பக்கத்துலேர்ந்து மாமா ஓடி வந்தாரு, தல தெறிக்க, மூச்சை புடிச்சுகிட்டு. என்ன பாத்ததும் லேசா பெருமூச்சு விட்டு, "இங்க தான் இருக்கியா? உன்ன பத்திர படுத்த தான் வந்தேன்"னாரு. "பத்திரமா? என்ன ஆச்சு மாமா?"னு கேட்டேன். "ஊரு ஒரு பக்கமா தீப்புடிச்சு இந்த பக்கத்துக்கும் பரவிக்கிட்டிருக்கு"ன்னு சொன்னாரு. இது ஒண்ணும் புதுசில்ல. அப்பப்போ இடி மின்னல் விழறப்போ லேசா நெருப்பு பரவும். உயரமான மரம் இருக்கிற இடத்துல வாழ்றவங்க இத எதிர்பாத்து, அதுக்கு தயாராவே இருப்பாங்க. ஆனா இப்போ அவர் சொன்னது பயங்கரமா இருந்துது. "எப்படி இவ்வளோ பெருசா, இப்போ?" ன்னேன். "அதுக்கெல்லாம் இப்போ நேரமில்ல, முதல்ல எதிர் பக்கத்துல கொஞ்சம் தள்ளி இருக்கிற ஆத்தோரமா போய் இருக்கிறது தான் சரி"ன்னு என்னையும் கூட வர சொன்னாரு. அவர் கூட ஈடு குடுத்து ஓட ஆரம்பிச்சேன், அப்போ தான் அப்பா அம்மா தம்பி நினைவே வந்தது, "பக்"குனு இருந்துது. "மாமா, மாமா!"ன்னு கத்திகிட்டே கேட்டேன். "அப்பா அம்மா பத்தி ஏதும் தகவல் உண்டா?". "இப்போதைக்கு எதுவும் இல்ல. அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சுருக்கும். பத்திரமா தான் இருப்பாங்க. நீ பயப்படாத"ன்னாரு. மறுபடி கொஞ்ச நேரம் போக "எப்படி இவ்வளோ பெருசா?"ன்னேன். மாமா ஓடிக்கிட்டே சொன்னாரு, "மான் வேட்டையாட வந்த நாலு பெரு ராத்திரி நல்லா கண்ணு மண்ணு தெரியாம குடிச்சுட்டு, குளிருக்கு ஏத்தி வெச்சிருந்த நெருப்ப அணைக்காம வண்டிய எடுத்துக்கிட்டு போயிட்டாங்க. அடிச்ச காத்துல பத்திக்கிச்சு. பரவின வேகத்துக்கு எச்சரிக்க முடியல. என்ன நடக்குதுன்னு புரியறதுக்குள்ள அந்த ஊரு மொத்தமும் எரிஞ்சு போச்சு. அது மட்டும் பத்தாதுனு சுத்தி எல்லா பக்கமும் பத்திக்கிடுச்சு. இப்போ எங்க எதுக்கு போறோம்னே தெரியாம ஓடிக்கிட்ருக்கோம்"னு அலுத்துகிட்டாரு. நடுவுல குறுக்கு வழிய கடக்கிறப்போ கால் தடுக்கி சரிஞ்சு விழுந்துட்டேன். போன வேகத்துல மாமா கவனிக்கல. திரும்பி பாத்திருந்தாலும் பனி மூட்டத்துல தெரிஞ்சுருக்காது. ஓ! அது புகை மூட்டமா? இப்போ தான் புரியுது எனக்கு. பக்கத்துல வேகமா வண்டியெல்லாம் போற சத்தம். ரோட்டுப் பக்கம்னு தெரிஞ்சுது. ஓடின களைப்பு வேற, பசியில கண்ணும் மங்க ஆரம்பிச்சுது. சாப்பிட ஏதாவது கிடைக்குமான்னு பாக்க போய் தான் பழ வண்டியில ஏறினேன். இப்போ இங்க இருக்கேன்"ன்னாரு.

எனக்கு அவர் சொன்னது புரியவே கொஞ்ச நேரம் ஆச்சு. அவருக்கு என்ன சொல்றதுன்னே புரியல. அடுத்து எங்க போறது? எப்படி போறது? யார தேடுறது? ஒரு பதில் கூட இல்லாம வெறும் கேள்விகள மட்டும் வெச்சு தெணறிக்கிட்ருக்கிற அவருக்கு என்னால சொல்ல முடிஞ்சுது ஒரு சாரி தான். யாரையும் குத்தம் சொல்லி இப்போ பிரயோஜனம் இல்ல. திடீர்னு என்னமோ தோணவே, அவர் டக்குன்னு பெஞ்சுலேர்ந்து எழுந்து "நான் சீக்கிரம் இங்கேருந்து போகணும், நல்லதில்ல"ன்னு தனக்கு தானே சொல்லிக்கிட்டு என்கிட்டே "நான் கிளம்பறேன். அக்கறையா விசாரிச்சீங்க, ரொம்ப நன்றி"ன்னு சொல்லிட்டு அவர் புறப்பட்டாரு. இத்தனை கூச்சல் குழப்பத்துல பாவம் அவர் வால் எரிஞ்சு போயிருந்தத கூட அவர் கவனிக்கல.

அவர் கிளம்பின அடுத்த நிமிஷம் வீட்டுல ஏத்தி வெச்ச கேண்டல் ஞாபகம் தூக்கி வாரி போட்டுது. உடனே ஓடி வந்து ஒண்ணும் ஆகலன்னு பாத்தப்புறம் தான் மூச்சே வந்துது. வீடுங்கறது வெறும் ஒரு இடம் மட்டும் இல்ல ல?

Friday 17 July 2020

மகேந்திர சிங் தோனி என்னும் நான்

நடுக்கடல் தீவில் சிக்கிய நம்மவரை காக்க வந்த தோணி
நான்காண்டுக்கு ஒரு முறை வரும் பசி நீக்க வந்த தோனி
சிக்கல்கள் வரும் போதெல்லாம் சொல்வார் "இதோ நீ"

ஊர் கண்டு மெச்சும் ஜார்கண்ட் மைந்தா
நாம் கண்ட சிறந்த டிக்கெட் கலெக்டரும் விக்கெட் கலெக்டரும் நீயே
உன் ஓராண்டு ஓய்வினால் தானோ என்னவோ
எல்லைக் கோட்டைத் தாண்ட எவருக்கும் வந்தது ஆசை

வெளியில் சென்றால் விதிவிலக்கில்லாமல் வீழ்ச்சி என்று
கொரோனாவுக்கு முன்னமே கூறிச் சென்றாயே
நீ அன்று இருந்திருந்தால்
சீதையும் ஒரு வேளை கோட்டை தாண்டி இருக்க மாட்டாள் போலும்

உன்னை கண்டவரெல்லாம் அன்று முடி வெட்டாமல் விட்டனர்
உன் ஆட்டத்தை காணாமல் இன்று நகம் வெட்டி கொண்டிருக்கின்றனர்
40க்கு மேலே தான் உன் பவர் பிளேவை பார்த்தோம்
40இல் நுழைந்து விட்டாய், ஒரு பிளேயாவது சாத்தியமா?

ஐசிசி கோப்பையெல்லாம் வென்று icy ஆக இருக்கும் எங்கள் IC (Indian Captain) யே!
வாழ்க நீ பல்லாண்டு !

Happy birthday, MSD!!

Saturday 23 May 2020

ஆடாம ஜெயிச்சோமடா

அன்னிக்கு காலையில 8 மணி இருக்கும். கடைசி பரீட்சைக்கு கிளம்பிக்கிட்ருந்தான். வழக்கத்தை விட குதூகலமாவும் எதையோ எதிர்பார்த்துட்டும் இருந்தான். முழு பரீட்சை முடியற நாள் வந்தாலே அதுக்கப்புறம் வரப்போற சம்மர் லீவு தானே ஞாபகம் வரும். அந்த கனவு கோட்டைல பரீட்சையை கோட்ட விட்டுடாதனு அம்மா சொன்ன வார்த்தையோடு சைக்கிள்ல ஏறி பள்ளிக்கூடத்துக்கு போனான். வழியெல்லாம் அதே நினைவு.

நாலாம் கிளாஸ் படிக்கிறப்போ, கூட படிக்கற பசங்க ஒரு சனிக்கிழமை லீவு விட்டாச்சுனு வீட்டுக்கு வந்து விளையாட கூப்பிட்டாங்க. அப்போ தான் மொத தடவ அவன் கிரவுண்டுக்கு விளையாட போனான். ஜே ஜே னு ஒரே கூட்டம். எங்க பாத்தாலும் பசங்க, ஒருத்தன் பந்த தொறத்தி ஓடுறான், இன்னொருத்தன்  அவனுக்கு குறுக்க புகுந்து ஓடிப்போய் பந்து வீசுறான். நாலா பக்கமும் பந்து பறக்குது. எது யார் பந்துன்னே தெரியாம இவன் பாக்க, நடுவுல ஒரு பிட்சுல இவன் பிரண்ட்ஸ் எல்லாம் கூடி பேசிக்கிட்ருந்தாங்க. இவன் பக்கத்துல ஒருத்தன் வந்து, "டாஸ் தோத்துட்டோம், நம்ம செகண்ட் பேட்டிங்"னு சொல்லிட்டு  "நேரா போய் பவுண்டரி"ல நில்லுன்னான். யார் எந்த டீம்ன்னே தெரியாம சரி போவோம்னு போய் நின்னான். அந்த தூரத்துலேர்ந்து அவன் நண்பர்கள் எல்லாரும் எங்க எங்க நிக்குறாங்கனு தெரியறதுக்குள்ள 2 ஓவர் முடிஞ்சு போச்சு. ஒரு வழியா எல்லாம் புரிஞ்சு, அவன் கிட்ட வந்த பந்த பிடிக்க முன்னாடி போனவன் மேல, நேரா இன்னொருத்தன் வந்து முட்டி ரெண்டு பேரும் கீழ விழ, பந்து ரெண்டும் மெதுவா உருண்டு பவுண்டருக்கு போய்டுச்சு. இப்போ எது யார் பந்துன்னு தெரியாம, ஆளுக்கு கெடச்ச பந்த எடுத்துக்கிட்டு சாரி சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. அதுக்கப்பறம் கொஞ்ச நேரத்துக்கு பந்து எதுவும் வரல. பொழுது போகட்டும்னு மத்த டீம் ஆடுறத பாத்துட்ருந்தான். "பாரேன், அந்த அண்ணா அடிச்ச அடியில பந்து தொலஞ்சே போச்சு. பந்த தேட போய்ட்ருக்காங்க." அப்படினு அவனுக்குள்ளயே சொல்லிக்கிட்டப்போ, தூரத்துல இன்னொருத்தன் இவன பாத்து, "டேய் தம்பி, பக்கத்துல இருக்கிற அந்த பந்த தூக்கி போடுடா"ன்னு கேட்டதும் உருண்டு வந்த பந்த எடுத்து மொத்த தெம்பையும் கொண்டு, கேட்டவன் பக்கம் எறிஞ்சான். அது மெதுவா உருண்டு ஒரு வழியா போய் சேர்ந்தது.

அடுத்த கொஞ்ச நேரம் ஹெவி டியூட்டி. 10 ஓவர் மேட்சுல கடைசி ரெண்டு மூணு ஓவர் எப்பவுமே அப்படி தான். பந்த தடுக்கிறானோ இல்லையோ, அது பவுண்டரிக்கு போனதும் பொறுக்கி போடறதுல ஒரு திருப்தி. அடிக்கடி செவுத்த தாண்டி பந்து வெளிய போறப்போ, சாமர்த்தியமா அது எங்க போயிருக்கும்னு கண்டு புடிச்சு கொண்டு வர்றதே ஒரு தனி பெரும தான். சில சமயம் பந்து கையில சிக்கும், பல சமயம்  நழுவிடும். ஆனா ஏதோ எல்லாத்தையும் பிடிக்க போற மாதிரி ஓடறதுக்கும் தாவறதுக்கும் கொறச்சல் இல்ல. பத்து ஓவர் முடிஞ்சு எல்லாம் பெவிலியன், அதான், சைக்கிள் ஸ்டாண்ட்க்கு திரும்பினாங்க. அதுக்குள்ள ஒருத்தன் போய் எல்லாருக்கும் வாட்டர் பாக்கெட் வாங்கிட்டு வந்தான். அந்த மனசு தான் சார் கடவுள்.

அடுத்து பேட்டிங். ஓப்பனிங் இறங்கி, அடிக்க வேண்டிய 53 ரன்னையும் தனி ஆளா 4,6 ன்னு அடிச்சு அஞ்சே ஓவர்ல மேட்ச்ச முடிக்கணும்னு எப்போவும் போல கனவு கோட்டை தான் கட்டினான். பேட்டிங் ஆடப் போற  எல்லாரும் ஒண்ணு அடிக்கணும் இல்ல அவுட் ஆகணும். அப்போ தான் அடுத்து இன்னொருத்தன் போய் ஆட முடியும். இது தான் சட்டம். சட்டத்தை மீறினா தண்டனை சுலபம். அடுத்து ஆட வேண்டியவன் தான் அம்பயரா இருப்பான். அவுட்டுன்னுடுவான். ஓரளவுக்கு ஆட தெரிஞ்சவன், இல்லேன்னா பேட்டுக்கு சொந்தக்காரன் மொதல்ல ஆடுவான். அப்புறம் சுமாரா ஆடுற கொஞ்சம் பேர் ஒவ்வொருத்தரா நீ நான்னு அடிச்சுகிட்டு, "நீ பவுலிங் போட்ட, நான் போடல"னு பஞ்சாயத்து பேசி ஒரு முடிவுக்கு வரதுக்குள்ள இருட்ட ஆரம்பிக்கும்.

கடைசியா 2 ஓவர் ல 15 ரன் வேணும்ங்கிற நிலைமையில எல்லாரும் அவுட் ஆகவே இவன ஆட சொல்லுவாங்க. "நீ தொட்டு மட்டும் விடு, பை ரன்னர் வெச்சுக்கலாம், அவன் ஓடிடுவான்"னு ஒருத்தன் மாஸ்டர்ப்லான் சொல்லுவான். இதை கேட்டு நம்பி போய் விளையாடினா கண்ணுல ஒண்ணுமே தெரியாது. ஒருத்தன் ஓடி வருவான் கைய சுத்துவான் அடுத்த நிமிஷம் பின்னாடி விக்கெட் கீப்பர் "பவுலிங்! பவுலிங்! கமான்"னு கத்தினப்புறம் தான் பந்து போனதே புரியும். இந்த இருட்டுல பந்த எங்க தொட்டு, எப்படி ஓடி, என்னத்த ரன் எடுக்கிறதுனு யோசிக்கிறப்போ, தெய்வாதீனமா எதிர் டீம்ல ஒருத்தன் சண்டை போட்டு "நான் ஓவர் போடுறேன், ஜெயிக்க தான் போறோமே"னு வந்து நோபால் ஒயிட் எல்லாம் போட்டு 2 பால்ல நாலு ரன்னுங்கிற நிலைமைக்கு கொண்டு வந்துடுவான். அடுத்த பந்துல ஒரு ரன். கடைசி பந்து, மூணு ரன் அடிச்சா ஜெயிப்பாங்க. அப்போ தான் பின்னாடில இருந்து ஒருத்தன் "அடி டா போர்"ம்பான். பை ரன்னர்  "எப்படியாவது தொட்டுடுடா, நான் ஓடிக்கிறேன்"ன்னுவான். தொட்டு விட்டா மூணு எல்லாம் ஓட முடியாது, அடிச்சா பந்து மொதல்ல பேட்ல படணுமே, பாக்கிறதே குத்துமதிப்பா தான். ஏதோ சமாளிச்சு தடவி விட்டா அப்போனு பாத்து சரியா பந்த புடிச்சுடுவாங்க. முடிஞ்சு போச்சுன்னு நெனைக்கிறப்போ தூக்கி போட்டு ஓவெர்த்ரோ. ஒரு வழியா ஜெயிச்சாச்சு. அன்னிக்கு நடந்ததுல யார் யார் என்னென்ன சொதப்பினாங்கனு மாத்தி மாத்தி கிண்டல் பண்ணிகிட்டே வீடு திரும்ப வேண்டியது தான்.

இதெல்லாம் பரீட்சை ஹால்ல இவனுக்கு வர்ற நெனப்பு. ஒரு வழியா எப்படியோ படிச்சது படிக்காதது எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்து எழுதி முடிச்சா போதும், விடுதலை. பேப்பர மடிச்சு குடுத்துட்டு கனவு கண்டுக்கிட்டே வீட்டுக்கு அவசரமா வரப்போ திடீர்னு எங்கேயிருந்து வந்ததோ தெரியல, கருமேகம். ஆனா அதெல்லாம் இவன் கண்ணுல படல. வீட்டுக்கு போய் பைய வெச்சுட்டு துணிய மாத்திக்கிட்டு கெளம்பணும். அம்மா அவன்கிட்ட "எப்படி எழுதின"னு கேட்டதுக்கு "முடிஞ்சுடுச்சுல, விடேன்"னு சலிச்சுக்கிட்டு குடுத்த பாலை குடிச்சுட்டு வெளிய போனா ஜோ னு கொட்டுது மழை. பொதுவா மழைன்னா அவனுக்கு பிரியம். ஜன்னல் பக்கத்துல வந்து தூறல்ல நனையறது தனி சுகம்னு நெனைக்கிறவன். அடுத்த நாள் வெந்நீரும் அம்ருதாஞ்சனும் அம்மா பொறுப்பு. ஆனா இன்னிக்கு என்னவோ அந்த மழை மேல எரிஞ்சு விழ ஆரம்பிச்சான், "இன்னிக்கு தான் வரணுமா? நானே இவ்வளோ நாளுக்கப்புறம் இன்னிக்கு தான் விளையாட போறேன். எனக்கு கஷ்டமான பரீட்சைக்கு முந்தின நாள் வந்தா என்னவாம்"னு. ஏதோ இந்தியா பாகிஸ்தான் வேர்ல்ட் கப் மாதிரி, "பிட்ச் எல்லாம் நனைஞ்சுடுமே, இந்த வாரமே விளையாட முடியாது. அடுத்த வாரம் ஊருக்கு போறோம். அப்புறம் அக்னி நட்சத்திரம்னு வெளிய போக விட மாட்டாங்க"ன்னு அடுக்கிட்டே போனான்.

கொஞ்ச நேரம் பொறுத்து, எப்படியும் விளையாட முடியாதுன்னு ஆனபிறகு வாசல்ல போய் மழை எப்போ நிக்கும்னு பாக்கறத விட்டுட்டு, ஜன்னல்கிட்ட வந்து உக்கார்ந்தான். மழைக்கு இதமா சாப்பிட சூடா நொறுக்கு தீனி கொண்டு வந்து குடுத்த அம்மா, அவன பார்த்து "நம்ம ஊருக்கு அடுத்த வாரம் போகல, உன் அத்தை மாமா சென்னை வர்றாங்களாம், அப்புறம் நீ ஏதோ கேட்டன்னு உங்கப்பா புது பேட் வாங்கி பரண் மேல போட்டு வெச்சுருக்காரு, பரீட்சை முடியற வரைக்கும் சொல்ல வேண்டாம்னு இருந்தேன்"னு சொல்லி முடிக்கறப்போ பரண் மேல ஏறி இருந்தான்.

Sunday 29 March 2020

கடமை

வீட்டுக்குள்ள இருந்துக்கலாம்
விளையாடி பழகிக்கலாம்
வேலைக்கு போகணுமா?
வெயில் மழை பாக்கணுமா?

(இந்த) வாய் அடைச்சு போனதில்லை
(நான்) வாய் அடைச்சு போயிருக்கேன்
வரவங்க போறவங்க
வழியனுப்பி நான் வாரேன்

வரும் முன்ன காக்க வேணும்
(வியாதி) வேரோட போக்க வேணும்
கடமை இது கடமை இது
வேற காரணமும் தேவையில்லை

கதவடச்சு காத்திரு நீ
இந்த காவலாளி பெத்த மகளே!

செல்ல மகள்

செஞ்ச தவமெல்லாம் சேர்த்து வெச்ச புண்ணியமா
செல்ல மகள் பொறந்தாச்சு சேதி சொல்லு ஊருக்குள்ள !

வண்ண துணி உடுத்தி வாரி தல நெறய
பூவும் வெச்சு நான் மகிழ
செல்ல மகள் பொறந்தாச்சு சேதி சொல்லு ஊருக்குள்ள !

நாட்டு நடப்பெல்லாம் நம்மளுக்கு புரிய வெக்க
நாலெழுத்து படிச்சு நம்ம நாதியையும் நிலை நிறுத்த
செல்ல மகள் பொறந்தாச்சு சேதி சொல்லு ஊருக்குள்ள !

காதல் கணவனை கல்யாணம் அவ முடிக்க
கண்ணு கலங்குதடி காலம் அது ஓடுதடி
என்றும் அவ தானே என் வீட்டு மகராசி, இன்று மறுவீடு
செல்ல மகள் பொறந்தாச்சு சேதி சொல்லு ஊருக்குள்ள !