அவள் ஒரு துடுக்கான பதினைந்து வயது இளம்பெண். இது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம் என்றும், இதில் பெறும் வெற்றியே வாழ்வை நிர்ணயிக்கப் போகிறதென்றும் பிறர் சொன்ன வதந்திகளை அவளால் நம்பாமல் இருக்க முடியவில்லை. அதனாலோ என்னவோ மிகுந்த பொறுப்புடனும் ஆர்வத்துடனும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு இராப்பகலாய் அயராது படித்து பள்ளியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றாள். அதிக மதிப்பெண் எடுத்ததால் ஊரின் பெரிய பள்ளியில் படிக்கும் வாய்ப்பும் கிட்டியது. அந்த இன்பத் திளைப்பில் ஆழ்வதற்குள் அடுத்த கேள்வி கண் முன் தோன்றியது. எந்தப் பிரிவு எடுத்து படிக்க வேண்டும் என்பது தான். மீண்டும் சுற்றம் சூழ்ந்து இது தான் மிக முக்கியமான முடிவென்று பயமுறுத்தியது மட்டுமின்றி அக்கம் பக்கத்தார் படித்து வேலைக்குச் சென்ற அதே பிரிவை பரிந்துரைத்தனர். பொறுப்பான பெண்ணான இவள் சற்றும் தளராமல் அவர்கள் சொன்ன பிரிவை எடுத்து புது பள்ளிக்கூடம் செல்லும் நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.
சற்று நேரத்தில் கேட்ட மணியோசை தூக்கத்திலிருந்து அவளை திடீரென்று விழிக்கச் செய்தது. எங்கிருந்து ஓசை வருகிறதென்பதை அவள் உணரவில்லை. சுற்றியும் பார்த்தால் நவீன வசதிகள், சொகுசு நாற்காலி, மேஜை, கணினி, கைபேசி, குளிரூட்டப்பட்ட அறை. கனவில் கண்ட அந்த இளம்பெண்ணினும் தான் முதிர்ச்சியான மங்கை எனத் திடுக்கிட்டாள். இடையில் கடந்த ஆண்டுகளும், தான் ஒரு சர்வதேச நிறுவனத்தில் வேலை செய்கிறாள் என்பதும், இரவு வேலை முடித்து மேஜை மேலே படுத்துறங்கி விட்டாள் என்பதும் அந்நொடியில் அவளுக்கு நினைவுக்கு வந்தது. உடனே மேஜை மீது அலறிக் கொண்டிருந்த கைபேசியை எடுத்து மேலதிகாரியின் கேள்விகளுக்கு பதில் சொன்னாள். "ஆம். இன்று அனுப்ப வேண்டிய ஆவணங்களில் தாங்கள் சொன்ன திருத்தங்களைச் செய்து முடித்து நேற்றிரவே உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டேன்" என்று சொல்லி முடித்து கைபேசியைக் கீழே வைக்கப் போனாள். அப்போது "சாப்பிட்டாயா? ஏன் ஒரு வாரமாக அழைக்கவே இல்லை? அந்த ஊரில் கொரோனா தொற்று மீண்டும் அதிகமானதென்று செய்தி பார்த்தோம். எந்த பிரச்சனையும் இல்லையே? பத்திரமாய் இரு. வேளைக்குச் சாப்பிடு" என்னும் குறுஞ்செய்தியும், ஆறு விடுபட்ட அழைப்புகளும் அவள் தந்தையிடமிருந்து வந்திருந்தது. "ஒரு பிரச்சனையும் இல்லை. வேலை இருந்ததால் அழைக்க நேரமில்லை" என்று பதில் அனுப்பினாள்.
மீண்டும் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவெடுக்கும் நேரம் வந்தது. ஆனால் இப்பொழுது பயமுறுத்தவோ பரிந்துரைக்கவோ உடன் யாருமில்லை. தன் வாழ்க்கை தன் கையில் என்று எண்ணி கைபேசியை எடுத்து தேட தொடங்கினாள், என்ன மதிய உணவு வாங்குவதென்று!
நல்லா இருந்துச்சு
ReplyDelete