பல ஆண்டுகளாக வேலைகளை செய்து வீட்டுக்கென யோசித்து இராப்பகலாய் உழைத்து அலுத்து களைத்து சலித்து போய், என்று தான் இதற்கெல்லாம் ஒரு விடிவு, முடிவு என்று ஏங்கும் அனைத்து பெரியவர்களுக்கும் வணக்கம்.
உங்கள் உடல் உள்ளம் ஒத்துழைத்தபோது நீங்கள் செய்த வேலைகள் அனைத்தும் இன்பத்தையும் கடமையை சரிவரச் செய்த திருப்தியையும் உங்களுக்கு அளித்திருக்கும். எங்களுக்கும் அப்படி தான். ஆனால் உடலோ உள்ளமோ ஒன்றவில்லை என்றாலும் கூட அந்த வேலையை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை உங்கள் தலைமுறை மட்டும் தங்கள் மீது விதித்துக் கொள்கிறது. கடமைகள், வீட்டு வேலைகள் என்றும் அழியாதவை. இன்று சமைப்பதால் நாளை சமைக்காமல் இருக்கப்போவதில்லை. பல நூற்றாண்டுகளாக சமைத்தும் இன்னும் வேலை முடிந்தபாடில்லை. ஒரு நாளோ சில நாட்களோ இவற்றை விட்டுக் கொடுத்தல் தட்டிக் கழித்தல் ஆகாது.
ஒரு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்துப் பூட்டிச் சென்று பல ஆண்டுகள் கழித்து வந்து பார்த்தால் அனைத்து பொருட்களும் அப்படியே இருக்கும், தூசியும் ஒட்டடையும் மட்டும் அதிகப்படி. அதே வீட்டில் ஒரு மனிதரைப் பூட்டிச் சென்றால்? பொருட்களை காக்கும் பொருட்டு உயிர்களை கவனிக்க மறக்கிறோமோ என்ற பயம் அதிகரிக்கிறது.
முப்பது நாற்பது வயதினர் தங்கள் பெற்றோர்களையும் பிள்ளைகளையும் குடும்பத்தையும் தங்களையும் சரிவர கவனித்துக்கொள்ள கஷ்டப்படுவது நியாயம் என்றே படுகிறது. அதே மக்கள் அறுபது வயதினர் ஆன பிறகும் பொறுப்புகளை வீட்டுக் கொடாமல் மேலும் அயர்ந்த தங்கள் உடல் உள்ளம் மீது செலுத்தும் பளு தவிர்க்கக்கூடியது. உங்கள் ஆயுள் முழுதும் உங்களுடன் பயணிக்கும் உடலுக்கு நீங்கள் காட்டும் நன்றி இதுவோ?
உங்கள் முடியாமையை சொற்கள் மறைக்கலாம். செயலும் உடலும் காட்டிக் கொடுத்து விடும். முடியாமை அவமானம் அல்ல. இயல்பு, தவிர்க்க முடியாதது. இயற்கையின் விதிகளில் ஒன்று. அதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஒதுக்கிச் செல்ல முடியாது.
உங்கள் பிள்ளைகள் உங்களிடம் உரக்கப் பேசுவதும் கோவம் கொள்வதும் உங்களுக்கு அவமரியாதையாக தோன்றுகிறது. என்ன சொல்கிறார்கள் என்பதை விட எப்படி சொல்கிறார்கள் என்பதே என்றும் உங்கள் பார்வை. அதனால் தானோ என்னவோ அன்பாக பணிவாக உங்கள் மீது பிறரால் நடத்தப்படும் அவமானங்களை நீங்கள் பொருட்படுத்துவதே இல்லை. அக்கறை மேல் மட்டும் தான் உங்கள் ஆத்திரம் எல்லாம்.
எல்லாத் தேவைகளும் சிறியவையே. எப்படியும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உணர்த்திய காலம் இந்த ஈராண்டு. உங்களிடம் 'எங்களுக்காக இதை செய்யுங்கள்' என்று கேட்கும் காலம் ஓடிவிட்டது. 'எங்களுக்காகவாவது எதையும் செய்து கொள்ளாதீர்கள்' என்ற கோரிக்கை மட்டுமே எங்களிடம் மீதமுள்ளது.